யுத்தத்திற்குப் பிந்தைய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னாள் ஜனாதிபதியின் முக்கிய சாதனைகள் – நாமல் ராஜபக்ஷ
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு கொலைகாரர் அல்ல என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சமீபத்தில் பொதுவெளியில் தெரிவித்திருந்தமை ஒரு நேர்மறையான விடயமாகும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவின் அண்மைய கருத்துகள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார்.
இதுகுறித்து மேலும் கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ,
“சரத் பொன்சேகா சில சமயங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைப்பவர். எனினும், யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதங்களை கீழே வைத்து சரணடைய வேண்டும் என, ஊடகங்கள் மூலம் வெளிப்படையான அழைப்பை விடுத்தவர் மஹிந்த ராஜபக்ஷ தான்.
போர்நிலையிலுள்ள சூழலில் இராணுவத்திடம் சரணடையுமாறு அழைப்பு விடுப்பது சாதாரண நடைமுறையே. ஆனால், அந்த காலகட்டத்தில் வழங்கப்பட்ட உத்தரவுகள் தொடர்பில் சரத் பொன்சேகா வெவ்வேறு காலங்களில் முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டுள்ளார்” என குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இராணுவ நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு எதிரானவை அல்ல; அவை பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானவையாகவே முன்னெடுக்கப்பட்டன. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக ஆயிரக்கணக்கான வீரர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளனர்.
குறைந்தபட்ச உயிர் இழப்புகளுடனும், சொத்து சேதங்கள் மிகக் குறைவாகவும் இருந்து நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதே மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான இலக்காக இருந்தது” என்றார்.
மேலும்,
“சில அரசியல் குழுக்கள் மற்றும் வெளிநாட்டில் இயங்கும் அமைப்புகள் சுமத்திய குற்றச்சாட்டுகள் போல, மஹிந்த ராஜபக்ஷ ஒரு ‘இரத்தவெறி கொண்ட தலைவர்’ அல்ல என்பதை சரத் பொன்சேகா தெளிவுபடுத்தியமைக்காக அவருக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
அழிவை ஏற்படுத்திய ஒருவராக அல்லாமல், நாட்டுக்கு சுதந்திரத்தையும் அமைதியையும் பெற்றுத்தந்த தலைவராகவே மஹிந்த ராஜபக்ஷ நினைவுகூரப்பட வேண்டும்.
யுத்தத்திற்குப் பின்னர் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட நெடுஞ்சாலைத் திட்டங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பல உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் அவரது முக்கிய சாதனைகளாகும். நாட்டில் நீடித்த அமைதியும் நிலைத்தன்மையும் உறுதி செய்வதே அவரது முதன்மை நோக்கமாக இருந்தது” என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

No comments
Thanks for reading….