இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பரவி வரும் தகவல்கள் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று (ஒக்டோபர் 5) இலங்கை பெட்ரோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் (CPPTOA), நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் எந்தவிதமான தட்டுப்பாடோ அல்லது தடையோ இல்லை என உறுதி செய்துள்ளது.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதற்கு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமல்ல என சங்கத்தின் தலைவர் A.M.H. அதிக்காரி தெரிவித்துள்ளார்.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உரிய நேரத்தில் எரிபொருளுக்கான ஆர்டர்களை முன்பதிவு செய்யாததன் காரணமாகவே குறிப்பிட்ட சில இடங்களில் வரிசைகள் ஏற்பட்டதாக அவர் விளக்கியுள்ளார்.
மேலும், எரிபொருள் விநியோகம் மற்றும் போக்குவரத்து தொடர்பில் சமீபத்தில் எழுந்துள்ள சில பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த ஒக்டோபர் 2ஆம் திகதி இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் D.J. ராஜகருணவும், எரிபொருள் விநியோகம் அல்லது போக்குவரத்தில் பெரியளவிலான பிரச்சினை எதுவும் இல்லை என தெரிவித்திருந்தார்.
எனவே, பொதுமக்கள் தேவையற்ற வகையில் எரிபொருளை சேமித்து வைக்கவோ, பீதியடைந்து அதிகளவில் கொள்வனவு செய்யவோ வேண்டாம் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
-KBKNEWS


No comments
Thanks for reading….